×

மேட்டுப்பாளையத்தில் சூறாவளியுடன் கனமழை: 70 ஆயிரம் வாழை, பப்பாளி மரங்கள் முறிந்து சேதம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று சூறாவளியுடன் பெய்த கனமழைக்கு 70 ஆயிரம் வாழை, பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்கபுரம், பள்ளேபாளையம் பட்டக்காரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. சிறுமுகை சுற்று வட்டார பகுதிகளான பள்ளேபாளையம், பட்டக்காரனூர் உள்ளிட்ட இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 20 ஆயிரம் பப்பாளி மரங்கள் முறிந்து சேதமாகின.

இதேபோல், சிறுமுகை சாலை, தோலம்பாளையம் சாலை, காரமடை சாலை, அன்னூர் சாலை, சக்தி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்ததில் மின்கம்பங்கள் வீடுகளின் மீது சாய்ந்தன. மரங்கள் விழுந்ததில் சில வீடுகள் சேதமாகின. துடியலூர் அம்பிகா நகரில் சூறாவளி காற்றுக்கு மின் கம்பிகள் உரசியதில் வெடி சத்தம் கேட்டது. இந்த அதிர்வால் டிரான்ஸ்பார்மரில் இருந்த ஆயில் டேங்கிலிருந்து எண்ணை சிதறி தீ பிடித்தது. தகவலறிந்து சம்பவயிடம் வந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இதுகுறித்து சிறுமுகை விவசாயி ஒருவர் கூறுகையில், `சூறாவளியுடன் பெய்த மழையால் இப்பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’’ என்றார்.

The post மேட்டுப்பாளையத்தில் சூறாவளியுடன் கனமழை: 70 ஆயிரம் வாழை, பப்பாளி மரங்கள் முறிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Mattuparam ,Mettupalayam ,Mettuparayam ,Dinakaran ,
× RELATED கோவை மேட்டுப்பாளையம் ரோடு...